How to enable Right-Clicking on websites that block it? நாம் பார்வையிடும் சில இணைய தளகங்களில் மவுஸினால் ”ரைட் கிளிக்” செய்யும் வசதி இணைய தள உருவாக்குனர்களினால் தடுக்கப்பட்டிருக்கும். அதாவது அவ்வாறு தடுக்கப்பட்ட இணைய பக்கங்களின் மீது ”ரைட்-கிளிக்” செய்யும்போது வழமையாகத் தோன்றும் ’மெனு’ தோன்றாது. இணைய தளங்களில் உள்ள ஆக்கங்களை அனுமதியின்றி பிரதி செய்வதனைத் தடுப்பதற்காகவும் இணைய தளத்தின் பாதுகாப்புக் கருதியும் இவ்வாறு ரைட் கிளிக் செய்யும் வசதி முடக்கப்படுவதுண்டு.
எனினும் ரைட்-கிளிக் செய்யும் வசதியை இல்லாமல் செய்வதனால் இணைய பயனர்கள் ரைட்-கிளிக் மெனுவில் கிடைக்கும் மேலும் பல வசதிகளை இழக்க நேரிடும். பொதுவாகச் சாதாரண இணைய பயனருக்கு ரைட் க்ளிக் செய்யும் வசதி அவசியப்படாவிட்டாலும் சில வேளைகளில் அந்த வசதி தேவைப்படுவது ம் உண்டு. இவ்வாறான சந்தர்ப்பங்களில் சில உபாயங்களைப் பயன்படுத்துவதன் மூலம் ரைட்-க்ளிக்கை மறுபடி செயற்படுத்தவும் முடியும்.
பிரவுசர் அமைப்பில் சிறிய மாற்றத்தைய் செயற்படுத்துவதன் மூலமோ அல்லது பிரவுஸருக்குரிய நீட்சியை நிறுவுவதன் மூலமோ ரைட் கிளிக் தடையை மிக இலகுவாக நீக்க முடியும்.
இணைய உலாவிகளில் (பிரவுசரில்) ரைட் க்ளிக்கைத் தடுப்பதற்காக JavaScript எனும் பின்னணியில் இயங்கும் ஒரு விசேட குறிமுறை பயன் படுத்தப்படுகிறது. அதனை இயங்காமல் செய்வதன் மூலம் ரைட்-க்ளிக்கை மறுபடி இயங்கவைக்கலாம். அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.
Chrome பிரவுசரில்
வலது பக்க மேல் மூலையில் உள்ள மெனு பட்டனில் க்ளிக் செய்து Settings தெரிவு செய்யுங்கள். அங்கு Privacy and Security > Site Settings > Content ஊடாக Java Script வரை சென்று அங்கு Don’t allow sites to use JavaScript ன்பதைத் தெரிவு செய்யுங்கள்.
Firefox – இல்
முகவரி பட்டியில் யில் about:config என டைப் செய்து எண்டர் விசையை அழுத்துங்கள். அப்போது ஒரு எச்சரிக்கைச் செய்தி தோன்றும். அங்கு I accept the risk என்பதைத் தெரிவு செய்யுங்கள். அப்போது திரையில் தோன்றும் நீண்ட பட்டியலுடன் கூடிய தேடற் பெட்டியில் javascript என டைப் செய்து எண்டர் விசையை அழுத்துங்கள். அப்போது தோன்றும் பட்டியலில் javascript.enabled என்பதை true நிலையிலிருந்து false நிலைக்கு மாற்றுங்கள்.
ரைட்-க்லிக்கை செயற்படுத்துவதற்குரிய இரண்டாவது வழிமுறை அதற்குரிய பிரவுஸர் நீட்சியை (Browser Extension) டவுன்லோட் செய்து நிறுவிக் கொள்வதாகும். ரைட்டு கொப்பி (RightToCopy) Extension க்ரோம் பிரவுஸருக்கென வெப்ஸ்டோரில் கிடைக்கிறது.
Edge – இல்
Settings > Cookies and Site permissions > javascript ற்கு எதிரே Allowed என்பதை முடக்குங்கள்
முக்கிய குறிப்பு: JavaScript இயங்குவதை நிறுத்துவதன் மூலம் பிரவுசரில் வழமையான பல செயற்பாடுகள் முடக்கப்படும். அதனால் ரைட் கிளிக் தேவை முடிந்ததும் JavaScript ஐ மறுபடி இயங்க வைக்க மறக்கக் கூடாது.