Roel Van De Paar – Another mystery channel on Youtube ராயல் வன் டி பார் – இவர் ஒரு யூடியூபர். யூடியூபர் என்பதை விட ஒரு கணினி நிரலாளர் (programmar). சேனல் பெயரும் ராயல் வன் டி பார் தான். சொந்த ஊர் ஆஸ்திரேலியா என ஒரு பதிவில் இருந்தது. அதுவும் உறுதியாகத் தெரியவில்லை.
அவர் டிசம்பர் 14, 2012 இல் யூடியூப் சேனல் ஆரம்பிக்கிறார். இருந்தாலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே தனது முதல் வீடியோவைப் பதிவேற்றினார். அவரது சேனலில் மே 31, 2019 திகதியன்று நான்கு வீடியோக்கள் மாத்திரமே இருந்தன. . பின்னர், மே 31, 2019 முதல், அவர் தொடர்ந்து அதிரடியாக வீடியோக்களைப் பதிவேற்றத் ஆரம்பித்தார்.
நாளைக்கு ஒன்றோ வாரத்திற்கு ஒன்றோ மாதத்திற்கு ஒன்றோ அல்ல. நிமிடத்திற்கு நான்கு முதல் 10 வீடியோக்களை அன்று முதல் இந்த நிமிடம் வரை அப்லோட் செய்து விடுகிறார் என்பது யாராலும் நம்ப முடியாத ஆச்சரியமான உண்மையாக இருக்கும். (எனது மதிப்பீடு குறைவாகவும் இருக்கலாம்)
மார்ச் 30, 2021 ஆம் திகதியன்று, அவரது பதிவேற்றங்களின் எண்ணிக்கை (1,000,000) ஒரு மில்லியனைத் தொட்டது. இறுதியாகப் பார்த்த போது அந்த எண்ணிக்கை 1,451,340 ஆக உயர்ந்திருந்தது. சப்ஸ்கிரைபர்கள் எண்ணிகை 28.3K ஆக இருந்தது.
அவரது சேனலில், அவர் தொழிநுட்ப உதவி வீடியோக்களைப் (technical help) பதிவேற்றுகிறார். ஒரு வீடியோ சராசரியாக ஒன்று முதல் நான்கு நிமிடங்கள்வரை ஓடும்.
அவர் பல ஐடி நிறுவனங்களுடன் தொடர்பு பட்டிருக்கிறார்.
அவரது வீடியோக்கள் நிச்சயமாகத் திட்டமிடப்பட்டு ஒரே நேரத்தில் பதிவேற்றப்படவில்லை.
இது யுடியூபில் PS3codMW3 மற்றும் CODblackopsPS சேனல்களை அடுத்து ஒரு மில்லியன் பதிவேற்றங்களை அடைந்த மூன்றாவது சேனல்.
அவர் ஏப்ரல் 10, 2021 இல் CODblackopsPS ஐ விஞ்சினார்.
வீடியோ இயங்க ஆரம்பித்ததுமே இண்ட்ரோ (intro) வீடியோவில் தோன்றி தான் தொழிநுட்ப உதவி வீடியோக்களை பதிவேற்றுவதாகவும் தனது சேனலைச் சப்ஸ்கிரைப் செய்து தனக்கும் தனது குடும்பத்திற்கும் உதவுமாறு அப்பாவி முகத்துடன் கேட்கிறார்.
ஆனால் சில விநாடிகளே வீடியோவில் தோன்றி வீடியோவிற்கு சம்பந்தமே இல்லாமல் பொதுவாகப் பேசி முடித்துக் கொள்வார். அது முன்னரே தயாரித்து வைத்திருக்கும் ஒரு வீடியோ கிளிப்.
அடுத்து கம்பியூட்டர் நிரலாக்காம் சார்ந்த ஒரு கேள்வியும் அதற்கான பதிலும் எழுத்து வடிவில் தோன்றும். அடுத்து பார்வையாளர்களுக்கு நன்றி கூறி ஒரு அவுட்ரோ (Outro) வீடியோ இயங்கும். அதுவும் முன்னரே தயாரித்து வைத்திருக்கும் வீடியோ கிளிப்தான். நடுவே பின்னணி இசையும் ஒலிக்கும்
இரண்டே நிமிடங்களுக்குள் வீடியோ நிறைவு பெறும்.
இப்படியே ஒவ்வொரு வீடியோவும் நகர்கிரது.
நாங்கள் ஒரு வீடியொவைப் பார்த்து முடிப்பதற்குள் அவர் புதிதாகப் பத்து வீடியோக்களை அப்லோட் செய்திருப்பார்.
இவ்வாறு நாளொன்றிற்கு ஆயிரக் கணக்கில் வீடியோ அப்லோட் செய்வதென்பது நிச்சயமாக ஒரு மனிதனால் முடியாத காரியம்.
அப்படியானால் எவ்வாறு அவரால் மட்டும் இப்படி பதிவேற்ற முடிகிறது. ஒரு வேளை அவர் வேற்றுக் கிரக வாசியாக இருப்பாரோ?
அவரது வீடியோக்களில் காண்பிக்கும் கம்பியூட்டர் நிரலாக்க கேள்வி பதிலில் தோன்றும் சில டெக்ஸ்ட் பகுதிகளைப் பிரதி செய்து கூகுலில் தேடியபோது (என்னிடம்) மாட்டிக் கொண்டார். அதே கேள்வியையும் பதிலையும் நிரலாக்கர்களிடையே பிரபலமான இணைய தளமான ஸ்டேக் ஓவர் ஃப்லோ (stack overflow) தளத்தைக் காண்பித்தது. இது போன்ற தளங்களிலிருந்துதான் தனது வீடியோக்களுக்கான உள்ளடக்கத்தைப் பெறுகிறார்.
கணினி நிரலாக்கத்தில் அவரும் ஒரு வல்லுநர் என்பதை அவரது இடைவிடாத யூடியூப் வீடியோ பதிவு உறுதி செய்கிறது.
ஆமாம்.
இவர் இந்த வீடியோக்களைப் பதிவேற்ற பாட் (bot) எனும் சிறிய கணினி நிரல்களைப் பயன் படுத்துகிறார். அதன் மூலம் தன்னியக்க (ஆட்டோ மேட்டட் –automated) முறையில் வீடியோ அப்லோட் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு விடியோவிலும் சேனல் லோகோ, இண்ட்ரோ வீடியோ, ஸ்டேக் ஓவர் ஃப்லோ, stackexchange போன்ற தளங்களிலிருந்து ஒரு கேள்வி, அதற்கு யாரோ ஒரு பயனர் அளித்த பதில், மற்றும் ஒரு அவுட்ரோ விடியோ கிளிப், பின்னணி இசை இவற்றைக் கொண்டு வீடியோ தானாக உருவாகி அது தானாகவே அப்லோட் செய்படுமாறு அந்தப் பாட்டை (bot) (🎼பாட்டு அல்ல) உருவாக்கியிருக்கிறார். வீடியோக்களுக்கு விவரணங்களையும் ஒரே மாதிரி அமைத்து விடுகிறது. வெவ்வேறான டைட்டில்களையும் தம்னேல் (thumbnail image) படங்களையும் கூட உருவாக்கி விடுகிறது.
ஆனால், பாவம்;அவர் பதிவிடும் விடியோக்களைப் பார்க்கத்தான் ஆட்களில்லை. ஒவ்வொரு வீடியோவிற்கும் 5 முதல் 10 பார்வைகள் மட்டுமே கிடைக்கின்றன. அவை கூட இந்த அதிசயத்தைக் காண வருபவர்களாக இருக்கக்கூடுமே தவிர நிச்சயமாக யாரும் இவரிடம் தொழிநுட்ப உதவியெல்லாம் பெற வருபவர்களாக இருக்க முடியாது. அது தவிர தவிர அட்சென்ஸ் விளம்பரங்களையும்கூட காண முடியவில்லை.
அவர் பதிவிடும் வீடியோக்களை அவர் கூட நிச்சயம் பார்த்திருக்க மாட்டார். அவர் பதிவிடும் அனைத்து வீடியோக்களையும் இன்னும் நாலு ஜன்மங்கள் எடுத்தாலும்கூட ஒருவரால் பார்த்து முடிக்க முடியாது என்பதும் உண்மை
சர்வர்களை மூச்சுத் திணற வைக்கும் இது போன்ற பாட்ஸ்களை (bots) யூடியூப் நிச்சயம் அனுமதிக்காது. ஆனால் இந்தச் சேனலை பிளாக் (block) செய்யாமல் இன்னும் விட்டு வைத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
ஒரு வேளை இவருக்கே தெரியாமல் இவரை வைத்து யூடியூப் நிறுவனமும் ஏதாவது சோதனை முயற்சியில் இறங்கியிருக்கவும் கூடும்.