Whatsapp updates its privacy policy புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கையின்படி (privacy policy) புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (terms and conditions) பிப்ரவரி 8 ஆம் தேதி செயற்படுத்தப்படும். எனவே அடுத்த மாதம் பெப்ரவரி 8 திகதிக்கு முன்னர் அதன் புதிய தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்ளும்படி பயனர்களைக் கேட்கிறது வாட்சப். அவ்வாறு ஏற்றுக் கொள்ளாவிட்டால்ல் இனிமேல் நீங்கள் வாட்சப் செயலியைப் பயன் படுத்த முடியாது.
விதிமுறைகளை ஏற்றுக்கொள்வது என்பது தொலைபேசி எண் உட்பட பயனரின் ஏராளமான தனிப்பட்ட தரவுகளை வாட்சப்பின் தாய் நிறுவனமான ஃபேஸ்புக் (Facebook) நிறுவனத்துடன் பகிரப்படும் என்பதாகும்.
இந்தப் புதிய அப்டேட் பற்றிய அறிவிப்பை வாட்சப் செயலியில் கடந்த இரண்டு நாட்களாக் (ஜனவரி 6 முதல்) காணக் கூடியதாக உள்ளது. உரிய தேதி வரும் வரை இந்த அறிவிப்பை பயனர்கள் புறக்கணித்துச் (ignore) செல்ல முடியும். எனினும் பெப்ரவரி 8 ஆம் தேதிக்குப் பிறகு வாட்சப்பைத் தொடர்ந்து பயன்படுத்த புதிய விதிமுறைகளை நீங்கள் ஏற்கத்தான் வேண்டும்.

“Agree” (ஒப்புக்கொள்) தெரிவு செய்வதன் மூலம் பிப்ரவரி 8, 2021 முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று அறிவிப்பு கூறுகிறது.
வாட்சப்பின் புதிய அப்டேட் படி பயனர் தரவுகள் ஃபேஸ்புக் நிறுவன தயாரிப்புகள் முழுவதும் ஒருங்கிணைப்புகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதில் இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் என்பன அடக்கம்.
வாட்சப் சேகரிக்கும் தரவுகளில் பயனர்களின் செயல்பாடு, பிற வாட்சப் பயனர்களுடனான தொடர்புகள், வாட்சப்பில் அவர்களின் செயல்பாடுகளின் நேரம், காலம், பகிரப்பட்டும் கோப்புக்களின் விவரங்கள் போன்ற ஏராளமான தரவுகள் அடங்கும்.
மேலும் பயனர்கள் பயன்படுத்தும் மொபைல் சாதனத்தின் பேட்டரி நிலை (battery level), சமிக்ஞை வலிமை (signal strength), வாட்சப் செயலியின் பதிப்பு (app version) , உலாவி (browser) பற்றிய தகவல்கள், மொபைல் நெட்வர்க் பற்றிய தகவல்கள் (தொலைபேசி எண், மொபைல் ஆபரேட்டர், இணைய சேவை நிறுவனம், ஐபி முகவரி, பயனர் மொழி மற்றும் நேர வலயம் போன்ற தரவுகளையும் வாட்சப் விட்டு வைக்காது.

புதிய கொள்கையின்படி மொபைல் ஃபோனிலிருந்து வாட்சப் செயலியை நீக்குவதால் மட்டும் பயனரின் தனிப்பட்ட தரவுகளை வாட்சப் சேமித்து வைத்துக்கொள்வதிலிருந்து வாட்சப்பைத் தடுக்காது. வாட்சப் பயனர் தரவை சேமிக்கமல் இருக்க பயனர்கள் தங்கள் கணக்கை செயலியில் தரப்பட்டுள்ள டெலீட் delete அம்சத்தைப் பயன்படுத்தி நீக்க வேண்டும்.
இந்த டெலீட் அம்சத்தைப் பயன்படுத்திய பிறகும் கூட, சில தரவுகள் வாட்சப் நிறுவனத்திடம் இருக்கும் என்று புதிய கொள்கை குறிப்பிடுகிறது. நீங்கள் உங்கள் கணக்கை நீக்கினாலும், நீங்கள் உருவாக்கிய குழுக்கள் அல்லது பிற பயனர்களுடன் நீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களைப் நீக்காது, பாதிக்காது, நீங்கள் அனுப்பிய செய்திகளின் நகல் பிற பயனர்களின் கணக்குகளில் அவை சேமிக்கப்படும்.
மேலும் பயனர்கள் இருப்பிடத் தரவை அணுக வாட்சப்பை அனுமதிக்காவிட்டால், தங்கள் இருப்பிடங்களை தங்கள் நன்பர்களுடன் பகிர்ந்து (location sharing) கொள்ள முடியாது போன்ற கூடுதல் தெரிவுகளும் புதிய அப்டேட்டில் இருக்கப் போகிறது.
பல வாட்சப் பயனர்கள் புதிய தனியுரிமைக் கொள்கையை சமூக ஊடகங்களில் விமர்சிப்பதையும் காண முடிகிறது. சிலர் டெலிகிரேம் போன்ற messaging பயன்பாட்டிற்கு மாற அறிவுறை கூறுகின்றனர்.
சில ”டெக் ஜாம்பாவான்கள், பயில்வான்கள்” வாட்சப்பில் நண்பர்களோடு, குடும்பத்தினரோடு நாங்கள் உரையாடும், பகிரும் அந்தரங்க செய்திகளையும் படங்களையும் வீடியோக்களையும் எமது குரல் பதிவுகளையும் வாட்சப் நிறுவனம் ஃபேஸ்புக்கில் பகிரங்கமாகப் பகிர்ந்து ”மானத்தை வாங்கிவிடப் போகிறது” என்பது போல் தவறாக அச்சமூட்டுவதையும் காணக் கூடியதாக உள்ளது.

உண்மையில் அப்படி அல்ல. நாங்கள் வாட்சப்பில் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் பகிர்வது போல் எங்கள் தரவுகளை வாட்சப் பெற்று அவற்றை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து விடப் போவதில்லை. இங்கு பயனர் தரவுகளை வாட்சப் நிறுவனம் ஃபேஸ்புக்குடன் பகிரப் போகிறது என்பது இதன் அர்த்தம் அல்ல.
வாட்சப் மூலம் சேகரிக்கும் தரவுகளை பகுப்பாய்வு (analyze) செய்து விளம்பர நோக்கில் ஃபேஸ்புக் நிறுவனம் பயன் படுத்தும்.
இது இனிமேல்தான் புதிதாக நடக்கப் போகும் விடயமல்ல. ஏற்கனவே பயனர் அனுமதியின்றியே இத்தரவுகளை வாட்சப் ஃபேஸ்புக்குடன் பகிர்ந்து வருவதாகவும் இனிமேல் அது உங்கள் அனுமதியுடன் நடக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
உங்களின் விருப்பு வெறுப்பிற்கேற்ப விளம்பரங்கள் (targeted ads) உங்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், மெசஞ்சர்பக்கங்களில் அவ்வப்போது காண்பிக்கப்படும். பயனருக்குக் கூடுதல் சேவைகளை வழங்குவதும் அதன்மூலம் தங்கள் நிறுவனத்தை வளர்ப்பதுமே ஃபேஸ்புக் நிறுவனத்தின் நோக்கம்.
வாட்சப் செயலியை இதுவரை காலமும் இலவசமாகவே பயன் படுத்தி வருகிறோம். இன்னும் இந்த இலவசம் தொடர வேண்டுமானால் அவர்கள் கேட்கும் அனுமதியை வழங்கத்தான் வேண்டும். அப்போதுதான் இலவச வாட்சப்பும் நிலைக்கும்.
மேலும் இனிமேல்தான் ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாக உங்களைப் பற்றி அறிந்து கொள்ளப் போகிறது என்பதல்ல. நீங்கள் ஃபேஸ்புக் பயன்படுத்த ஆரம்பித்த நாள் முதலே உங்களைப் பற்றிய விவரங்களை ஃபேஸ்புக் அறிந்தே வைத்திருக்கிறது. ஏன், கூகுல் கூட உங்களைப் பற்றி ஏராளம் கதைகள் சொல்லும். நீங்கள் பார்வையிடும் அனேகமான இணைய தளங்களும் கூட பயனர் தரவுகளை பல நோக்கங்களில் சேமிக்கின்றன.
Privacy Policy, Terms and Conditions, EULA (End User License Agreement) போன்ற வாசகங்கள் எங்களுக்குப் ஏற்கனவே பரிச்சயமானவைதான். வாட்சப்பை முதன் முதல் நிறுவும்போது கூட Privacy Policy மற்றும் Terms and Conditions திரை தோன்றி மறைந்திருக்கும். நீங்களும் என்ன ஏது என்று படிக்காமலே Agree பட்டனில் க்ளிக் செய்திருப்பீர்கள்.
மேலும் கணினியிலோ மொபைலிலோ ஏதாவது அப்லிகேசனை நிறுவும்போது Privacy Policy, Terms and Conditions, EULA தலைப்புகளுடன் திரையில் தோன்றும் நிபந்தனைகள் அடங்கிய அந்த நீண்ட உரைப் பகுதியை யாராவது படித்துப் பார்த்திருக்குறீர்களா என்று கேட்டால் ”இல்லை” என்றே பதில் வரும். எப்போதும் அவற்றை கண்களை மூடிக் கொண்டு Agree பட்டனில் க்ளிக் செய்யவே பழகியிருக்கிறோம்.
எமது வரலாறு இப்படியிருக்க இப்போது மட்டும் வாட்சப்பின் இந்த புதிய தனியுரிமைக் கொள்கை குறித்து அச்சம் கொள்வது வேடிக்கையாக இருக்கிறது.
தனியுரிமை பற்றிய விழிப்புணர்வு எங்களை விட மேற்கு நாட்டவரிடம் அதிகமிருப்பது உண்மைதான். அதனால அவர்கள் அதனையிட்டுக் கவலைப் படுவதில் நியாயம் இருக்கிறது. ஆனால் நாங்கள் அதனையிட்டு “அலட்டிக் கொள்ள” வேண்டிய அவசியமில்லைை.
நான் அறிந்தவரை வாட்சப்பின் இந்த பிரைவசி பாலிசி ஒரு டேக் இட் ஈசி பாலிசிதான்