WhatsApp Pink வாட்ஸ்-அப் பயனர்களிடையே புதிய வைரஸ் பரவ ஆரம்பித்திருக்கிறது. வாட்ஸ்-அப் பிங்க் எனும் பெயரில் வாட்ஸ்அப் லோகோவின் பச்சை நிறத்தை இளஞ்சிவப்பு நிறமாக மாற்றுவதாகக் கூறும் இணைப்பு வாட்ஸ்அப் குழுக்களில் பரப்பப்படுகிறது. வாட்ஸ்அப் பிங்க் (WhatsappPink) வாட்ஸப்பின் மாற்றுப் பதிப்பு எனக் கூறி இந்த வைரஸ் பகிரப்படுகிறது.
வாட்ஸ்அப் பிங்க் என்பது அடிப்படையில் தீம்பொருள் அல்லது தீங்கிழைக்கும் ஒரு கணினி நிரல். இந்த தீம்பொருள் சமீபத்தில் ஒரு இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளரால் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த புதிய தீம்பொருளால் பாதிக்கப்பட்டால் சாதனத்தின் கட்டுப்பாட்டையும் அதில் உள்ள தரவையும் முழுமையாக இழக்க நேரிடும். வைரஸ் நிறுவப்படும் தொலைபேசியில் ஹேக்கருக்கு முழுமையான அணுகலை இந்த வைரஸ் வழங்கும்.
தீங்கு விளைவிக்கும் வாட்ஸ்-அப் செய்தியில் APK கோப்பு பதிவிறக்கத்திற்கான இணைப்பும் உள்ளது. வாட்ஸ்அப் பிங்க்கை பதிவிறக்கம் செய்ய பயனர்கள் இணைப்பைக் கிளிக் செய்யுமாறு கேட்கப்படுவார்கள். இணைப்பைக் கிளிக் செய்யும் எந்தவொரு பயனரும் APK பதிவிறக்கத்திற்கு திருப்பி விடப்படுவார் பதிவிறக்கம் செய்யப்படும் இக் கோப்பிலேயே வைரஸ் மறைந்திருக்கும்.
பயனர்கள் புதிய வாட்ஸ்-அப் செயலியை நிறுவும் ஆரவத்தில், அவர்கள் ஒரு வைரஸைப் பதிவிறக்கி ஏமாற்றப்படுகிறார்கள். மேலும், ஸ்மார்ட்போனில் வைரஸ் கேட்கும் அனுமதிகளை உடனடியாக வழங்குகிறார்கள்.
கூகுல் மற்றும் ஆப்பிளின் அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோரில் / ப்லே ஸ்டோரில் கிடைப்பதைத் தவிர வேறு எந்த APK அல்லது மொபைல் பயன்பாட்டையும் வாட்ஸ்அப் பயனர்கள் ஒருபோதும் நிறுவக்கூடாது

இதுபோன்ற தீங்கிழைக்கும் பயன்பாடுகள் உங்கள் தொலைபேசியிலுள்ள ஃபோட்டோஸ், எஸ்எம்எஸ், தொடர்புகள் போன்ற தனிப்பட்ட தரவைத் திருட பயன்படுத்தலாம்.
நீங்கள் தட்டச்சு செய்யும் அனைத்தையும் கண்காணிக்க விசைப்பலகை அடிப்படையிலான தீம்பொருள்களைப் பயன்படுத்தலாம்.
ஆனலைன் வங்கி கடவுச்சொற்களைப் திருடவும் இதைப் பயன்படுத்தலாம்.
எனவே தீங்கிழைக்கும் இணைப்புடன் நீங்கள் வாட்ஸ்-அப்பில் இது போன்ற ஒரு செய்தியைப் பெற்றிருந்தால், அதைக் கிளிக் செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.
இலவச பரிசுகள், பயன்பாட்டில் அதிகாரப்பூர்வமற்ற மாற்றங்கள் மற்றும் பலவற்றைக் கோரும் இணைப்புகளைக் கிளிக் செய்யாதீர்கள்.
அத்தகைய இணைப்புகளை மற்ற வாட்ஸ்அப் பயனர்களுக்கு அனுப்புவதைத் தவிருங்கள்.