வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டும்
WhatsApp Group Ethics :
1. முதலில் வாட்சப் குழு நிர்வாகிகள் (Admins) ஒருவரை வாட்சப் குரூப்பில் இணைக்கும் போது அவரது அனுமதியோடு இணைத்துக் கொள்ளுங்கள். ஒருவரது சம்மதமின்றி இணைத்த பிறகு உங்களுக்குச் சொல்லாமலேயே அவர் வெளியேறவும் கூடும். அப்படி வெளியேறுவது உங்களை வருத்தப்பட வைக்கும். இருந்தாலும் உங்கள் நட்பை இழக்க வேண்டி வருமோ, உங்களை அவமதித்ததாக ஆகிவிடுமோ என்றெண்ணி பலரும் நீங்கள் இடும் சம்பந்தமேயில்லாத பதிவுகளையெல்லாம் சகித்துக் கொண்டே வெளியேற முயற்சிக்காமல் அப்படியே இருந்து விடுவார்கள். அதனால் எப்போதும் ஒருவரது அனுமதியோடு சம்ம்மதத்தோடு குரூப்பில் இணைத்துக் கொள்ளுங்கள் அல்லது உங்கள் குரூப்பில் இணைந்து கொள்ளுமாறு அவர்களுக்கு (Invitation link) லிங்க் அனுப்புங்கள். அவர்கள் விரும்பினால் இணைந்து கொள்வார்கள்.
ONLY FOR THE DUMMIES ; NOT FOR THE TECH GEEKS
இங்கு சொல்லப்படும் டிப்ஸ் அனைத்தும் வாட்சப்பில் புதியவர்களுக்கும், எதுவும் தெரியாத அப்பாவிகளுக்கும் தான். வாட்சப்பில் பாண்டித்தியம் பெற்றவர்களுக்கும், டெக்னாலஜியில் கரை கண்டவர்களுக்குமல்ல.
WhatsApp Group Ethics : வட்சப் நெறிமுறைகள்
2. ஒருவர் வாட்சப் குழுவை விட்டு வெளியேற விரும்பினால் ”I’m sorry” என்ற செய்தியோடு வெளியேறுங்கள். (இதை தமிழிலும் சொல்லலாம்) அதனை விடவும் குழு நிர்வாகியைத் தொடர்பு கொண்டு உங்களைக் குரூபிலிருந்து நீக்கி விடும்படி வேண்டுகோள் விடுக்கலாம். அதன் மூலம் நீங்கள் வெளியேறியது பற்றி யாரும் விசாரித்தால் கூட நீங்களாக வெளியேறவில்லை; அட்மின்தான் வெளியேற்றினார் என பழியை அவர் மீது போட்டு விடலாம்.
WhatsApp Group Ethics Tamil
3. குழுவிலிருந்து யாரும் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென வெளியேறினால் அவர் மீது கோபப்பட வேண்டிய அவசியம் இல்லை. அது அவர் இஷ்டம். அவருக்கு அது அசௌகரியமாக இருந்திருக்கலாம். அதனால் வெளியேறியிருப்பார். மீண்டும் அவர் திரும்பி வந்து இணையவும் கூடும்.
4. உங்களால் வெளியேற முடியாத சந்தர்ப்பங்களில் அந்த குரூப்பிலிருந்து வரும் அறிவிப்புகளை ஓசை காட்டாத (Mute Notifications) நிலையில் வைத்திருங்கள். இதனால் அறிவிப்பு தொந்தரவிலிருந்து மீள முடிவதோடு நேரம் கிடைக்கும் போது விரும்பினால் செய்திகளைப் படித்துக் கொள்ளலாம்.
5. உங்களுக்கு அறிமுகமில்லாத ஒருவர் உங்களை ஒரு குரூப்பில் இணைத்தால் உடனடியாக வெளியேற வேண்டியதில்லை. அந்த குரூப் எவ்வாறு நகர்கிறது என்பதை சிறிது அவதானியுங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து இருங்கள் . பிடிக்காவிட்டால் சொல்லாமலே வெளியேறி விடுங்கள்.
6. உத்தியோக பூர்வ நிறுவனம் சார்ந்த வாட்சப் குழுக்களில், குழு ஆரம்பித்திருப்பதன் நோக்கத்தைப் புரிந்து கொண்டு அது தொடர்பான செய்திகளை மட்டுமே பதியுங்கள்.
7. நிறுவனம் சார்ந்த வாட்சப் குழுக்களில் பகிரப்படும் தகவல்கள் ஒரு தனிநபருக்கோ அல்லது குழுவில் உள்ள சிலருக்கு மட்டுமோ அல்லாமல் குழுவில் உள்ள அனைவருக்கும் பொதுவானதாக இருக்கட்டும்.
8. நிறுவனம் சார்ந்த வாட்சப் குழுக்களில் சில வேளை whatsapp குழு அங்கத்தவர் ஒருவருக்கு குரூப்பிற்கு சம்பந்தமேயில்லாத தனிப்பட்ட ஒரு செய்தியைச் சொல்ல வேண்டிய தேவை வரலாம். சுமார் 200 பேரளவில் இருக்கும் ஒரு பெரிய குரூப்பில் அத்தனை பேருக்கும் தனித் தனியாக ஒரே செய்தியை அனுப்பாமல் ஒரே செய்தியில் அனைவருக்கும் அந்த தகவலைச் சொல்ல அவர் இந்த குரூப்பை பயன் படுத்த முடியும். உதாரணமாக வீட்டில் நடை பெறவிருக்கும் ஒரு விசேட நிகழ்விற்கு குரூப்பிலுள்ள அனைவரையும் ஒரே செய்தியில் அழைக்க அவரை அனுமதிக்கலாம். ஆனால் செய்தியைப் படித்த அத்தனை பேரும் குருப்பை பயன் படுத்தி பொது வெளியில் தனித்தனியாக அவருக்கு பதில் சொல்லவோ வாழ்த்துச் சொல்லவோ கூடாது. அதற்கு நீங்கள் ப்ரைவேட் மெஸ்ஸேஜ் வசதியைப் பயன்படுத்த வேண்டும்.
9. உண்மையான மற்றும் உறுதி செய்யப்பட்ட செய்திகளை மட்டுமே பகிருங்கள். இடுகையிடுவதற்கு முன்பு இது உண்மையானதா, குரூப்பில் பகிரப் பொருத்தமானதா, கட்டாயம் பகிரத்தான் வேண்டுமா போன்ற விடயங்களை நீங்களே உங்களுக்குள் கேட்டுக் கொள்ளுங்கள்.
10. உங்களுக்கு வேறு வழிகளில் முன்னர் கிடைக்கப் பெற்ற ஒரு செய்தியை குழுவில் பகிர விரும்பினால் (forward) பகிர முன் செய்தியின் தேதியைச் சரிபார்த்துக் அது மிகவும் பழைய செய்தியல்ல என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு பகிருங்கள். காரணம் இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்த ஒருவரின் இறப்புச் செய்திக்கு மறுபடியும் ஒவ்வொருவரும் வரிசையாக வந்து ’ரிப்’ (RIP- Rest In Peace) போடுவார்கள், இன்னலில்லாஹி பாடுவார்கள்.
11. நீங்கள் பயன் படுத்தும் வார்த்தைகள் சில வேளைகளில் தவறாகவும் புரிந்து கொள்ளப்படக் கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே தவறாகப் புரிந்துகொள்ள முடியாதவாறு உங்கள் வார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள்.
12. இ(எ)மோஜி எனும் உணர் ’ஜி’ இமேஜுகளைப் பயன்படுத்து வதிலும் கவனம் செலுத்துங்கள். வார்த்தைகளுக்குப் பதிலாகவே இமோஜீக்கள் பயன் படுத்தப்படுகின்றன. எனவே பாராட்ட வேண்டிய ஒரு செய்தியைக் காணும் போது அதற்கு ”ஹா ஹா” இமோஜி போட்டு கிண்டல் செய்து விடாதீர்கள்.
13. குரூப்பில் யாராவது ஒரு கேள்வியைக் கேட்டால், அதற்கான பதில், உங்களுக்குத் தெரியாமல் இருந்தால் ”தெரியாது” என முந்திக் கொண்டு என்று பதிலளிக்க வேண்டாம். தெரிந்த ஒருவர் பதிலளிப்பதற்காகக் காத்திருங்கள்.
14. குரூப்பில் நீங்கள் கேள்விகேட்டு, யாரும் அதற்கு பதிலளிக்காவிட்டாலும் அதற்காகக் கோபப்படாதீர்கள். நீங்கள் அந்தக் கேள்வியை குரூப்பில் கேட்பதை விட அவருக்கு நேரடியாக செய்தியனுப்பிக் கேட்க முடியும்.
15. குரூப்பில் உள்ள ஒருவருக்கு பதில் சொல்ல விரும்பினால் புதிய செய்தியாக (New Message) அல்லாமல் ரிப்லை (Reply) பட்டன் மூலம் பதில் சொல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். காரணம் நீங்கள் பதில் சொல்வதற்குள் எத்தனையோ புதிய செய்திகள் குரூப்பில் பகிரப்பட்டிருக்கலாம். எனவே உரிய செய்தியைத் தெரிவு செய்து பதில் சொல்லுங்கள்.
16. குரூப்பில் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட முறையில் ஹாய் சொல்லவோ, சலாம் போடவோ, உரையாடவோ வேண்டாம். நீங்கள் யாருக்காவது பதிலளிக்க விரும்பினால் விரும்பும் நபரின் செய்திக்கு மேலே உள்ள பெயர் அல்லது எண்ணைத் தட்டுவதன் மூலம் தனிப்பட்ட செய்திகளை (Private Message / Reply privately) அனுப்ப முடியும்.
17. குழுவில் பகிரப்படும் ஒவ்வொரு செய்திகளிற்கும் பின்னூட்டமளித்து தொல்லை கொடுப்பதை விட, குழுவில் நடப்பதை அவதானித்துக் கொண்டு அமைதியான ஒரு பார்வையாளராகக் கூட இருந்து கொள்ளலாம். ஆனால் அப்படியிருக்கும் போதும் சில வேளை பிறர் உங்களை வாட்சப் தெரியாத, டெக்னாலஜி அறியாத ஒரு கற்கால மனிதராகவும் எடை போட வாய்ப்புண்டு.
18. கண்டதையெல்லாம் குரூப்பில் பகிர்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் . பொதுவாக இக் காலத்தில் அனைவருமே இணையத்தில், சமூக வலைத்தளங்களில் சஞ்சரிப்பவர்கள்தான். கூகுலை அறிந்தவர்கள்தான்
சிலர் குரூப்பில் கண்டதையெல்லாம் பகிர்ந்தாலும் தமக்குத் தெரிந்த ஒரு நண்பரின் சுய ஆக்கத்தை விடயத்தோடு சம்பந்தப்பட்டதாயிருந்தாலும் கண்டு கொள்ளவே மாட்டார்கள். அப்போது ஈகோவும் ஜெலஸியும் அவர்களின் மண்டைக்குள் புகுந்து விடும்.
19. குழுவில் ஒருவர் அறியாமையில் ஏதாவது பகிர்ந்தால் அல்லது தவறு செய்தால் அதனைப் பற்றி பகிரங்கமாக குழுவில் விமர்சிக்காமல் தனிப்பட்ட முறையில் அவருக்கு செய்தியனுப்பி அவரது பிழையை சுட்டிக் காட்டலாம். (இது வாட்சப் குழு நிர்வாகிகள் மட்டுமல்ல நிர்வாகப் பொறுப்புகளில் இருக்கும் அனைவருக்கும் பொருந்தும்)
20. மதம் சார்ந்த, அரசியல் கட்சி சார்ந்த விடயங்களில் எதிர்மறையான செய்திகளை வெளியிட வேண்டாம். மத விவகாரம் பற்றியும் விவாதிக்க வேண்டாம். ஏனெனில் அது பிறரை மறைமுகமாக காயப்படுத்தக் கூடும். பல மதத்தினர் இருக்கும் குழுக்களில் அனைவரையும் மத சார்பின்றி உரிய மரியாதையுடன் நடாத்துங்கள்.
21. குழுவில் உள்ள சக நண்பரை அவமானப்படுத்தாதவாறு பாதிக்காதவாறு உங்கள் பதிவுகள் இருக்கட்டும். மேலும் உங்கள் பதிவுகளும், பின்னூட்டங்களும் நீங்கள் யார் என்பதையும், உங்கள் சிந்தனைப் போக்கு எத்தகையது என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும்.
22. விளம்பரங்கள் மற்றும் ஆஃபர்கள் (promotion offers)பற்றிய செய்திகளை பகிர வேண்டாம், ஏனெனில் அவற்றில் பெரும்பாலானவை போலியானவை. மேலும் குழுவில் உள்ள அனைத்து தொடர்பாளர்கள் (Contacts) விவரங்களை சேகரிக்கும் நோக்கிலும் அவை பகிரப்படுகின்றன என்பதை நீங்கள் அறிவீர்களா?
23. “இந்த செய்தியை மூன்று நிமிடங்களுக்குள் 10 பேருக்கு அனுப்புங்கள் , உங்களுக்கு 24 மணி நேரத்தில் எதிர்பாராத ஒரு நல்ல சேதி வரும்” போன்ற ஜக்கம்மா ரக போலிச் செய்திகளையெல்லாம் பகிராதீர்கள். அப்படி பகிர்ந்ததனால் நல்ல சேதி யாருக்கும் இதுவரை வரவுமில்லை. பகிராததனால் யாருக்கும் தீங்கு நடந்து விடவுமில்லை. பகிரச் சொல்லி வரும் பிரார்த்தனைகளுக்கும் இது பொருந்தும்.
அதேபோல் ”கூகுலின் 20 வது பிறந்த நாள் ஆஃபர், 21 வது பிறந்த நாள் ஆஃபர்; 100 ஜிபி இண்டர்நெட் இலவசம்” என வரும் இணைப்புகளை (links) பகிரவும் வேண்டாம் அவற்றில் க்ளிக் செய்யவும் வேண்டாம். அது உங்கள் தனிப்பட்ட தரவுகளைத் திருடுவதற்கான முயற்சிகள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இது போன்ற போலிச் செய்திகள் ஸ்கேம் (scam) எனப்படுகின்றன.
24. நிறுவனம் சார்ந்த உத்தியோகபூர்வ குரூப்களில் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் நண்பர்கள் குரூப்களில் போன்று நடந்து கொள்ளாதீர்கள். பொது நகைச்சுவை துணுக்கு, வீடியோ, மீம்ஸ், ஸ்டிக்கர் போன்றவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
சில குரூப்களில் ஆளாளுக்கு மாறி மாறி ஸ்டிக்கரைத் தட்டியே சாக(வ)டிப்பார்கள். திட்டுவதற்கென்றே சில விசேட ஸ்டிக்கர்களையும் அவர்களே உருவாக்கி வைத்திருப்பார்கள்
25. முன்னர் பகிரப்பட்ட ஆடியோக்கள், வீடியோக்கள், புகைப்படங்கள், செய்திகள், மீம்ஸ்களை மீண்டும் மீண்டும் பகிராதீர்கள்.
26. வாட்ஸ்ஸப் குழுக்களை செய்திகளை மட்டும் பகிர்வதற்குப் பயன் படுத்தாமல் தமது குரூப்பிலுள்ள சகாக்களுடன் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றம் செய்யவும் விவாதிக்கவும் கூடப் பயன் படுத்துங்கள். அந்த விவாதங்களில் நீங்கள் மட்டும் ஆக்கிரமிப்புச் செய்யாமல் அடுத்தவரின் கருத்துக்களிற்கும் மதிப்பளித்து அவற்றைப் படித்து விட்டு உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்
27. ஒன்றிற்கு மேற்பட்ட குரூப்களில் இணைந்திருந்தால் ஒரே விடயத்தை எல்லா குழுக்களிலும் பகிராதீர்கள். ஒவ்வொரு குழுவில் இருப்பவர்களின் ரசனை ஒரே மாதிரியிருக்காது.
28. அளவில் பெரிய கோப்புக்களை (files) , வீடியோக்களை பகிர்ந்து விடாதீர்கள். அவற்றைத் தேக்கி வைக்கக் கூடிய உயர் கொள்ளவுடைய மெமரி எல்லோருடைய மொபைலிலும் இருக்காது. மேலும் அவற்றை டவுன்லோட் செய்வதற்கும் அதிக டேட்டா செலவாகும். அப்படி யாரும் பெரிய ஃபைல்களைப் பகிர்ந்து விட்டால் உடனடியாக அதனை டவுன்லோட் செய்து பார்க்க வேண்டியதில்லை. அவற்றை டவுன்லோட் செய்வதற்கு ஆஃப் பீக் அவர் (off-peak hour) / நைட் டைம் டேட்டாவைப் (night-time data) பயன் படுத்துங்கள். மேலும் ஆட்டோ லவுன்லோட் (auto download) வசதியை எப்போதும் முடக்கி (disable) வையுங்கள. டேட்டா செலவைப் பற்றி கவலைப் படாதவர்கள் ஆட்டோ லவுன்லோடை இயங்கு நிலையில் வைக்கலாம்.
29. வாட்ஸ்அப் குரூப்பில் நீங்கள் பகிரும் செய்தி இன்னொருவரின் தொலைபேசியில் தரையிறங்கும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் பகிரும் செய்திகளைப் பற்றி எப்போதும் விழிப்போடு இருங்கள்.
30 இறுதியாக, உங்களுக்கு எதையாவது பகிர வேண்டுமென ஆசையிருந்தால் இந்த ஆக்கத்தை நீங்கள் கடமையாற்றும், அனைத்து வாட்சப் குரூப்களிலும் பகிர்ந்து விடுங்கள். கீழுள்ள பட்டன்களில் க்ளிக் செய்து ஃபேஸ்புக், ட்விட்டரிலும் கூட பகிர்ந்து விடலாம்.
”நிச்சயமாக 24 மணி நேரங்களில் உங்களுக்கு நல்ல சேதி வீடு தேடி வரும்”
இது போன்ற நீங்கள் அறிந்த வாட்சப் நெறிமுறைகள் இருக்குமானால் கீழே பதிவு செய்யலாம்.