Starlink-Satellite internet will begin services next month ஸ்பேஸ்-எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவை அடுத்த மாதம் அதன் பீட்டா கட்டத்திலிருந்து வெளியேறி பொது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அறிவித்துள்ளார் அதன் தலைமை நிர்வாகி ஏலான் மஸ்க். (செயற்கைக்கோள் =செய்மதி=satellite)
ஸ்டார்லிங்க் என்பது செயற்கைக் கோள்கள் மூலம் இணைய சேவை வழங்க இருக்கும் செயற்கைக்கோள்களின் நெட்வர்க் (Network of Satellites) ஆகும். இது ஏலான் மஸ்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டது.
ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வழியிலான இண்டர்நெட் விமானங்கள், கப்பல்கள், காடுகள், மலைகள், பாலைவனங்கள், கிராமப்புறங்கள் மற்றும் அதிவேக பிராட்பேண்ட் அணுகல் இல்லாத உலகின் பல பகுதிகளில் உள்ள மக்களுக்கு இணைய சேவையை வழங்குவதையே நோக்காகக் கொண்டுள்ளது. மேலும் இது 100Mbps பதிவிறக்கம் மற்றும் 20Mbps பதிவேற்ற வேகம் கொண்டிருக்கும்.
செயற்கைக் கோள் வழியே இண்டர்நெட் சேவை வழங்க இருக்கும் முதல் நிறுவனமல்ல ஸ்பேஸ்-எக்ஸ். ஏற்கனவே ஹியூஸ்நெட் HughesNet, வியாசட் (ViaSat) முதலான நிறுவனங்கள் செயற்கைக்கோள் இணைய சேவை வழங்கி வருகின்றன. ஆனால் அவறறின் சேவையை உலகின் அனைத்து பிரதேசங்களிலும் பெற முடியாது.
வழமையான தொலை தொடர்பு மற்றும் தொலைக் காட்சி சேவைகளை வழங்கும் செயற்கைக்கோள்கள் 35,000 கிமீ தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன அல்லது பூமியைச் சுற்றி வருகின்றன. ஆனால் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் நெட்வர்க் பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 550 கிமீ தொலைவில் பூமியின் சுற்றுப்பாதையில் வலம் வருகின்றன. இதன் காராணமாகச் செயற்கைக் கோள் தொடர்பாடலில் ஏற்படும் (லேடன்சி-latency) தாமதம் சிறிதளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பேஸ்-எக்ஸின் முதல் ஸ்டார்லிங்க் பணி மே 24, 2019 அன்று ஆரம்பிக்கப்பட்டது. அப்போது 60 செயற்கைக்கோள்கள் ஒரே தடவையில் விண்ணில் ஏவப்பட்டன. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை ஏவியுள்ளது ஸ்பேஸ்-எக்ஸ். மேலும் 12,000 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு ஒப்புதல் அளிக்கப்படுள்ளது. தற்போது ஸ்டார்லிங்க் ஏவியுள்ள மொத்த செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 1,737 வரை உயர்ந்துள்ளது. மேலும் 30,000 செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு ஒப்புதல் அளிக்குமாறு அமெரிக்க ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனை (FCC) கோரியுள்ளது SpaceX. அப்போதுதான் உலகம் முழுவதும் செயற்கைக் கோள் இணையத்தை விஸ்தரிக்க முடியும் என எதிர்பார்க்கிறது.
ஒவ்வொரு ஸ்டார்லிங்க் செயற்கைக்கோளும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 260 கிலோ எடையையும் கொண்டுள்ளது.
மேலும் இந்தச் செயற்கைக்கோள்கள் லேசர் ஒளியைப் பயன்படுத்தி ஒன்றோடொன்று தொடர்பு கொள்கின்றன. மேலும் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் கூட்டத்தில் உள்ள நான்கு செயற்கைக்கோள்களுடன் எந்த நேரத்திலும், இணைப்பில் இருக்கும்.
பூமியிலிருந்து இணைய சமிக்ஞை அனுப்பப்படும்போது, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் ஒன்று அதனைப் பெற்று பிணையத்தில் உள்ள மற்ற செயற்கைக்கோள்களுடன் தொடர்பு கொள்கிறது. சமிக்ஞை மிகச்சிறப்பாக அமைந்துள்ள செயற்கைக்கோளை அடைந்தவுடன், அது பூமியில் உள்ள (தரையில் உள்ள) ரிசீவருக்கு அனுப்பப்படும்.
ஸ்டார்லிங்க் கடந்த வருடம் அக்டோபர் மாத்தில் தனது பீட்டா (Beta) சோதனையைத் ஆரம்பித்தது. தற்போது அமெரிக்கா, கனடா மற்றும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே ஸ்டார்லிங்கின் சேவை கிடைக்கிறது, மிக விரைவில் உலகின் அனைத்து பிரதேசங்களுக்கும் இந்தச் சேவை கிடைக்கும்
இந்த இணைய சேவை ஆரம்பித்து அடுத்த 12 மாதங்களுக்குள் 500,000 க்கும் அதிகமான பயனர்களைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கிறது ஸ்டார்லிங்க்.
ஸ்டார்லிங் சேவையைப் பெற தற்போது நீங்கள் டிஷ்டிவி, வீடியோகான் போன்ற DTH செய்மதி தொலைக்காட்சி சேவையைப் பெற பயன் படுத்தும் சிறிய டிஷ் அண்டெனா போன்ற ஒரு டிஷ் மற்றும் ஒரு ரவுட்டர் சாதனம் என்பன அவசியம். இரண்டும் இணைந்த அலகொன்றின் விலை $499 எனவும் மாதாந்தம் இணைய சேவைக் கட்டணமாக $99 எனவும் விலை நிர்ணயித்துள்ளது ஸ்டார்லிங்க்.
அண்ட்ராய்டு மற்றும் iOS ற்கான ஸ்டார்லிங்க் செயலியும் உருவாக்கப்படுள்ளது. இந்தச் செயலியில் வாடிக்கையாளர்கள் தங்கள் டிஷ் அன்டெனாவை அலைன் செய்வதற்கான ஒரு சிறந்த இடத்தைத் தெரிவு செய்ய உதவும் வகையில் ஆக்மெண்டட் ரியாலிட்டி (augmented reality) தொழிநுட்பம் இணைக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்லிங்க்கின் வருகையானது வழமையான இணைய அணுகல் இல்லாத பகுதிகளில் வாழும் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.