- ஏதோவொரு விடயம் சார்ந்த ஒன்றோடொன்று தொடர்பு பட்ட, ஒழுங்கு படுத்தப்பட்ட தரவுகளின் தொகுதியே தரவுத் தளம் (Database) எனப்படுகிறது.
- ஒரு தரவுத் தளத்திலிருந்து தேவையான போது தரவுகளை மீளப் பெறவோ அல்லது வேறு செயற்பாடுகளுக்குட்படுத்தவோ முடியும். தரவுத் தளம் என்பதற்கு உதாரணமாக ஒரு பாடசாலையில் கற்கும் மாணவர்களின் விவரம், தொலைபேசி விவரக்கொத்து (telephone directory) , வாக்காளர் பட்டியல், Contact List (தொடர்புப் பட்டியல்) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
- தரவுத்தளங்கள் (Manual Database) கைமுறைத் தரவுத்தளம், (Electronic Database) மின்னணு தரவுத்தளம் அல்லது இலத்திரன்(னியல்) தரவுத்தளம் என இரு வகைப்படும்.
- மின்னணு (Electronic Database) தரவுத்தளத்தில் கை முறையைவிடப் பல வசதிகள் உள்ளன.
- தரவுத் தளமொன்றை உருவாக்கவும் அதனை நிர்வகிக்கவும் பயன்படும் மென்பொருள்களை DBMS (Database Management System) எனப்படும்.
- தரவுத் தள நிர்வாகம் எனும்போது தரவுத் தளமொன்றிற்குப் புதிதாகத் தரவுகளைச் சேர்த்தல், தரவுகளை நீக்குதல், மீளப் பெறல், அவற்றைப விரும்பிய கோணத்தில் பார்வையிடல், பாதுகாத்தல் போன்ற பல செயற்பாடுகள் அடங்குகின்றன.
- MS-Access, Oracle, Fox Pro, Open Office Base, Libre Base, My SQL, dBase III+, என்பன சில DBMS மென்பொருள்களுக்கு உதாரணங்களாகும்
- அட்டவணை (Table), படிவம் (Form), அறிக்கை (Report), வினவல் (Query) என்பன எந்தவொரு DBMS மென்பொருளிலும் பொதுவாகக் காணக்கூடியதும் தரவுத்தளமொன்றை நிர்வகிக்கப் பயன்படுவதுமான நான்கு (Database Objects) கருவிகள்.
- அட்டவணையே-Table தரவுத் தளமொன்றின் அடிப்படையாகும். அட்டவணையிலிருந்தே வினவல், படிவம், அறிக்கை என்பன உருவாக்கப்படுகின்றன.
- ஒரு தரவுத்தளத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட அட்டவணைகள் (tables) இருக்க முடியும்.
- பொதுவான புலம் ஒன்றின் மூலம் ஒன்றோடொன்று தொடர்பு படுத்தக்கூடிய பல அட்டவணைகளைக் கொண்ட ஒரு தரவுத்தளம் தொடர்புடைமை தரவுத் தளம் (Relational Database–RDBMS) எனப்படும். இங்கு ஒன்றுக்கு மேற்பட்ட அட்டவணைகளிலிருந்து தேவையான தரவுகளை மீளப் பெறலாம்.
- ஒரே ஒரு அட்டவணையை மாத்திரம் கொண்ட தரவுத் தளம் ஒற்றைக் கோப்பு தரவுத்தளம் (Flat File) எனப்படும். இரண்டு அட்டவணைகளில் உள்ள ஒரு பொதுவான புலத்தை Key Field எனப்படும்.
- ஒரு அட்டவணையானது குறிப்பிட்ட விடயம் சார்ந்த தரவுகளைக் கொணடிருக்கும். ஒரு அட்டவணையில் ஒவ்வொரு நிரலும் (Column) ஒரு புலத்தையும் (field) ஒவ்வொரு நிரையும் (row) ஒரு பதிவையும் (record) குறிக்கும்.
- ஒரு அட்டவணையில் ஒரே தரவுக் கூட்டம் மறுபடியும் வழங்கப் படுவதைத் தவிர்ப்பதற்காகப் பயன்படும் புலமே (Primary Key) முதன்மை சாவியாகும். இந்த முதன்மைச் சாவிப் புலமானது ஒவ்வொரு பதிவையும் (record) மற்றையதிலிருந்து வித்தியாசப் படுத்திக் காட்டும் வன்ணம் தனியான இயல்பைக் (Unique) கொண்டிருக்கும். உதாரணம் : அடையாள அட்டை இலக்கம், பாடசாலை அனுமதி இலக்கம்,
- எம்.எஸ்.எக்ஸஸ் அட்டவணை ஒன்றில் முதன்மைச் சாவியாகப் பயன் படுத்தக்கூடிய ஒரு புலம் இல்லையெனில் Auto Number எனும் புலம் உருவாக்கப்படும்.
- சில வேளை இரண்டு புலங்களை ஒன்றாகச் சேர்த்து முதன்மைச் சாவியாக வரையறை செய்யப்படும். அவை சேர்மானச் சாவி (Composite key) எனப்படும்.
- ஒரு அட்டவணையில் பிரதான புலமாகச் செயற்டும் ஒரு புலம் மற்றுமொரு அட்டவணையில் சாதாரண ஒரு புலமாகப் பயன் படுத்தப்படுமானால் அது அந்நியச சாவி (Foreign Key) எனப்படும்.
- அந்நியச் சாவி மூலம் இμண்டு அட்டவணைகளுக்கிடையே தொடர்புடைமை Relationship உருவாக்கப்படும்.
- அட்டவணையொன்றில் ஒவ்வோர் (row) நிரையிலும் தரவானது மீள்பதிவு செய்யப்படுவது
தரவு மீள்பதிவாக்கம் data duplication எனப்படும். - ஒரே தரவானது பல அட்டவணைகளில் சேமிக்கப்படுவது தரவு மறுபதிவாக்கம் data redundancy – என அழைக்கப்படும்.
Queries வினவல்
- தரவுத் தளமொன்றில் தேவையான தரவுகளை குறிப்பிட்ட சில நிபந்தனைகளோடு வேறாக்கிப் பெறலாம் . இதற்கு குவரி (Query) எனும் கருவி பயன் படுத்தப்படும்.. இது தரவுத்தளத்தை வினவுதல் எனும் பொருள் படும். தேவையெனின் குவரியிலிருந்து படிவம் ஒன்றையோ அறிக்கையொன்றையோ உருவாக்கலாம்.
- தரவுகளை உள்ளீடு செய்யவும் அவற்றைப் பார்வையிடவும் அட்டவணைகள் பொருத்தமான தெரிவாக அமையாது. எனவே தரவுகளை இலகுவாக உள்ளீடு செய்யவும் அத்தோடு ஒன்றுக்கு மேற்பட்ட அட்டவணைகளிலிருந்து தரவுகளைப் பார்வையிடவும் (Form) படிவங்கள் உருவாக்கப்படுகின்றன. படிவங்கள் ஒரு சமயத்தில் ஒரு பதிவை மட்டுமே காண்பிக்கும்.
- தரவுகளைப் பார்வையிடவும் அவற்றை அச்சிட்டுக் கொள்ளவும் அறிக்கை (Report பயன்படுகிறது, அறிக்கை மூலம் தரவுகளின் சாராம்சத்தை (Summary) மட்டும் வேறாக்கியும் பெறலாம்.
- Text, Memo, Number, Date/ Time, Currency, Yes / No எக்ஸலில் உள்ள சில தரவு வகைகளாகும் (Data types)
- ஒரு அட்டவணையில் தேவையற்ற தகவல்களைத் தவிர்த்து தேவையான தகவல்களை மட்டும் சில நிபந்தனைகளோடு வடி கட்டுதலை பில்டர் (Filter) எனப்படும்.
- இரண்டு அட்டவணைகளுக்கிடையே One-to-One, One-to- Many, Many-to-Many என மூன்று விதமான தொடர்புடைமையை (relationship) உருவாக்கலாம்.
- .ஒரு அட்டவணையில் உள்ள ஒரு பதிவு அடுத்த அட்டவணையில் உள்ள ஒரே ஒரு பதிவுடன் மாத்திரமே பொருந்துமாயின் அது One-to-One இணைப்பு எனப்படும். இங்கு இரண்டு அட்டவணைகளிலும் ஒரே மாதிரியான தகவல்களைக் கொண்ட ஒரு பொதுவான புலம் காணப்படும்.
- உதாரணமாக ஒவ்வொரு பிரஜையும் ஒரு கடவுச்சீட்டு (பாஸ் போர்ட்) வைத்திருக்க முடியும். ஒவ்வொரு பாஸ்போர்டும் ஒவ்வொருத்தருக்குச் சொந்தமானது.
- தயாரிப்பு மற்றும் தொடர் எண் Product and Serial Number: ஒவ்வொரு தயாரிப்புக்கும் தனித்துவமான தொடர் எண் உள்ளது. ஒவ்வொரு தொடர் எண்ணும் ஒரு தனிப்பயன் தயாரிப்பை அடையாளப்படுத்துகிறது.
- One-to-One இணைப்பு ஒரு சிறந்த தொடர்பு முறை எனக் கருத முடியாது. ஏனேனில் அந்த இரு அட்டவணைகளையும் ஒரே அட்டவணையாக இணைத்துக் கொள்ளலாம்.
- ஒரு அட்டவணையில் உள்ள சில நிரல்கள் Columns) அடிக்கடி பயன் படுத்துபவையாகவும் சில நிரல்கள் அடிக்கடி பயன் படுத்தப்படாத சந்தர்ப்பத்தில் ஒரே அட்டவணையை இரண்டாகப் பிரித்து அங்கு One-to-One இணைப்பை உருவக்கிக் கொள்ளலாம். ஒருவர் ஒரு கடவுச் சீட்டு மாத்திரம் வைத்திருக்க முடியும். இங்கு கடவுச் சீட்டு வைத்திருப்பவரின் விவரங்கள் ஒரு அட்டவணையிலும் கடவுச் சீட்டு விவரங்கள் இன்னோர் அட்டவனையிலும் பதியப்படும். முதல் அட்டவணையிலிருக்கும் ஒருவருக்கு ச் சொந்தமான கடவு சீட்டு இரண்டாவது அட்டவணையில் ஒன்றேயொன்று மாத்திரமே இருக்கும். விரும்பினால் கடவுச் சீட்டு விவர அட்டவணையிலுள்ள புலங்களை முதல் அட்டவணையுடன் சேர்த்து ஒரே அட்டவணையாகத் தயாரிக்கவும் முடியும்
- ஒரு அட்டவணையில் உள்ள ஒரு பதிவு அடுத்த அட்டவணையிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளுடன் பொருந்துமாயின் அது One-to-many இணைப்பு என்ப்படும். உதாரணமாக ஒருவர் ஐந்து சிம் அட்டைகள் வைத்திருக்க முடியும். இங்கு சிம் அட்டை வைத்திருப்பவரின் விவரங்கள் ஒரு அட்டவணையிலும் சிம் அட்டை விவரங்கள் இன்னோர் அட்டவனையிலும் பதியப்படும். முதல் அட்டவணையிலிருக்கும் ஒருவருக்குச் சொந்தமானசிம் அட்டைகள் இரண்டாவது அட்டவணையில் ஐந்து காணப்படும். இன்னொரு வகையில் சொன்னால் இரண்டாவது அட்டவணையில் உள்ள ஐந்து சிம் அட்டைகள் முதலாவது அட்டவனையில் உள்ள ஒருவருக்கு மாத்திரமே சொந்தமாக இருக்கும்.
- வாடிக்கையாளர் மற்றும் ஆர்டர்கள் Customer and Orders: ஒரு வாடிக்கையாளருக்கு பல ஆர்டர்கள் இருக்கலாம், ஆனால் ஒவ்வொரு ஆர்டரும் ஒரு வாடிக்கையாளருடையது மட்டுமே.
- எழுத்தாளர் மற்றும் புத்தகங்கள் Author and Books: ஒரு எழுத்தாளர் பல புத்தகங்களை எழுதலாம், ஆனால் ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒரு எழுத்தாளர் மட்டுமே இருப்பார் (பெரும்பாலான சந்தர்ப்பங்களில்).
- பல்கலைக்கழகம் மற்றும் துறைகள் University and Departments: ஒரு பல்கலைக்கழகத்தில் பல பிரிவுகள் இருக்கும், ஆனால் ஒவ்வொரு பிரிவும் ஒரு பல்கலைக்கழகத்திற்கு மட்டுமே சொந்தமானது.
- பொதுவாக One-to-many இணைப்பே அதிகம் பயன் பாட்டிலுள்ளது.
- ஒரு அட்டவணையில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிரைகள் அடுத்த அட்டவணையில் உள்ள ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட நிரைகளுடன் பொருந்தக் கூடியதாயிருப்பின் அது Many-to-Many Relationship எனப்படும். உதாரணமாக ஒரு பாடசாலையில் உள்ள ஒவ்வொரு ஆசிரியரும் பல மாணவர்களுக்குக் கற்பிப்பர். அதேபோல் ஒவ்வொரு மாணவனுக்கும் பல ஆசிரியர்கள் கற்பிக்க முடியும்.
- மாணவர் மற்றும் பாடநெறிகள் Student and Courses: பல மாணவர்கள் பல பாடநெறிகளில் சேரலாம், ஒவ்வொரு பாடநெறிக்கும் பல மாணவர்கள் சேர்க்கப்படலாம்.
- நடிகர் மற்றும் திரைப்படங்கள் Actor and Movies: பல நடிகர்கள் பல திரைப்படங்களில் தோன்றலாம், ஒவ்வொரு திரைப்படத்திலும் பல நடிகர்கள் இடம்பெறலாம்.
- இரண்டு அட்டவணைகளிடையே Many-to-Many Relationship வகை தொடர்புடைமையை உருவாக்க மூன்றாவதாக ஒரு இணைப்பு அட்டவணை (linking table) அவசியம்.