What is MicroBlog? பிளாக் – Blog (Web Log) என்பதைப் பலரும் அறிந்திருக்கலாம். இதனைத் தமிழில் வலைப்பதிவு, வலைப்பூ எனும் பெயர்களில் அழைக்கப்படும். அன்றாடம் மனதில் தோன்றும் எண்ணங்களை இணையம் வழியே பதிவு செய்வதையே வலைப்பதிவு எனப்படுகிறது.
மைக்ரோபிளாக்கிங் (Microblogging) என்பதும் வலைப்பதிவு போன்றதே. ஆனால் இங்கு சொல்ல வரும் கருத்துக்களும் தகவல்களும் நீண்டதாக அல்லாமல் மிகச் சுருக்கமாக (சுமார் 300 சொற்களின் கீழ்) இணையம் வழியே பதிவிடப்படுவதுடன் அவை அடிக்கடி புதுப்பிக்கவும் படுகின்றன. இவை படங்கள், இன்போகிராஃபிக்ஸ், வீடியோ மற்றும் ஆடியோ கிளிப்புகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம்.
மைக்ரோ பிளாக் மூலம் பகிரப்படும் பொதுவான உள்ளடக்க வகைகளில் செய்திகள், மீம்ஸ், மேற்கோள்கள், நிகழ்வுகள், மற்றும் இன்ஃபோகிராஃபிக்ஸ் போன்றன அடக்கம்.
முன்னரே பயன்பாட்டில் உள்ள வலைப்பதிவிற்கான சேவைகளை வழங்கி வரும் பிளாக்ஸ்பாட் (blogspot), வர்ட்ப்ரெஸ் போன்றல்லாது மைக்ரோபிளாக் எனப்படுபவை டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் பதிவுகள் இடம் பெறுகின்றன.
பலராலும் அறியப்பட்ட மைக்ரோபிளாக் தளமாக டுவிட்டரைக் குறிப்பிடலாம். டுவிட்டர் தளமானது இன்று வரை மைக்ரோ ப்லோக் சேவையில் பிரபல்யம் பெற்று விளங்குகிறது.
டுவிட்டரில் நீங்கள் அதிகபட்சம் 280 (முன்னர் 140 ஆக இருந்தது) எழுத்துக்களுடன் பதிவிடலாம். இப்பதிவுகள் டுவீட்ஸ் எனப்படுகின்றன. இந்த டுவீட்ஸில் ஹேஸ்டேக் (#hashtags), வேறு ட்விட்டர் பயனர்களுக்கான இணைப்புக்கள், படங்கள், வீடியோ மற்றும் பிற இணையதளங்களுக்கான இணைப்புக்கள எனப் பலவகைகள் அடங்குகின்றன.
டுவிட்டர் மொபைல் செயலி அறிமுகமாக முன்னர் ட்விட்டர் பதிவுகளை உலகெங்குமுள்ள சாதாரண கையடக்கத் தொலைபேசி வலையமைப்புகளுக்கூடாகக் குறுஞ்செய்திகளாக (SMS) பெறமுடியுமாயிருந்தது டுவிட்டரின் சிறப்பம்சமாக இருந்தது. ஆனால் தற்போது பல நாடுகளில் அந்த வசதி நிறுத்தப் பட்டிருக்கிறது.
ஃபேஸ்புக் வழங்கும் மைக்ரோ பிளாலோக் வசதியானது டுவிட்டரைவிட பயனுள்ளதாகக் கருதலாம். ஏனெனில் பேஸ்புக்கில் நீண்ட கட்டுரைகளையும் பதிவிட முடியும்.
டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் தளங்கள் மைக்ரோ பிலாக் உலகில் ஆதிக்கம் செலுத்தினாலும் இன்னும் பல தளங்கள் மைக்ரோபிளாக் சேவையை வழங்கி வருகின்றன. அவற்றுள் யாகூவின் Tumblr குறிப்பிடலாம். மேலும் மைக்ரோபிளாக் தளங்களுக்கு உதாரணங்களாக Instagram, Pinterest, Reddit, LinkedIn போன்றவற்றையும் குறிப்பிடலாம்.
“மைக்ரோபிளாக்” எனும் சொல்லை நாம் அதிகளவில் பயன் படுத்தாவிட்டாலும் நம்மில் பலர் அதை அறியாமலேயே ஏற்கனவே மைக்ரோபிளாக்கிங் செய்து கொண்டுதான் இருக்கிறோம்.