What is WhatsApp Broadcast? ஒரே நேரத்தில் பல பேருக்கு செய்திகளை அனுப்ப அனுமதிக்கும் இரண்டு அம்சங்கள் வாட்ஸ்ஸப்பில் உள்ளன. அவற்றில் ஒன்று நீங்கள் எல்லோரும் அறிந்த எமக்கு அடிக்கடி தொல்லை தரும் வாட்ஸ்ஸப் குரூப் (Group) எனும் வசதி. மற்றுமோர் அம்சம் பலராலும் பயன்படுத்தப்படாத வாட்ஸ்ஸப் ப்ரோட்காஸ்ட் (Broadcast) எனும் வசதி. இரண்டையும் ஒரே நபர்களோடு அல்லது தொடர்புப் பட்டியலோடு பயன்படுத்தலாம். உதாரணமாக, நீங்கள் ஏற்கனவே உங்கள் நண்பர்களை உள்ளடக்கிய ஒரு வாட்ஸ்ஸப் குழுவை உருவாக்கியிருந்தால் அதே நண்பர்களுடன் ஒரு ப்ரோட்காஸ்ட் பட்டியலையும் உருவாக்க முடியும்..
வாட்ஸ்ஸப் குழுக்களும் வாட்ஸ்ஸப் ப்ரோட்காஸ்ட் பட்டியல்களும் ஒத்ததாகத் தோன்றினாலும், அவை வெவ்வேறு நோக்கங்களிற்காக பயன் படுத்தப்படுகின்றன.
இரண்டிற்கும் என்ன வேறுபாடு என இப்போது நீங்கள் வினவலாம்?
வாட்ஸ்ஸப் குரூப் என்பது ஓர் இரு வழிப்பாதை (two-way) போன்றது. இங்கு பல பேருடன் இணைந்து, அரட்டை (Chat) அடிக்கலாம் அதாவது ஒருவருக்கொருவர் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள முடியும். மேலும் ஒருவர் பதிவிடும் தகவலை அந்த குரூப்பில் உள்ள அனைவராலும் பார்வையிடவும் முடியும். குரூப்பில் உள்ளவர்கள் பற்றியும் அறிந்து கொள்ள முடியும். இது நீங்கள் ஏற்கனவே அறிந்த விடயம்தான்.
அதேவேளை வாட்ஸ்ஸப் ப்ரோட்காஸ்ட் என்பது ஒரு வழிப்பாதை (one-way) போன்றது. இங்கு குழு நிர்வாகி மட்டுமே செய்திகளை அனுப்ப முடியும். பெறுநர்கள் (recipients) பதில் செய்தி அனுப்பவோ குழுவிலுள்ள ஏனையோருடன் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவோ தகவல்களை பறிமாறிக் கொள்ளவோ முடியாது. இன்னும் சொல்வதாயிருந்தால் உங்கள் ப்ரோட்காஸ்ட் பட்டியலில் யாரெல்லாம் இருக்கிறார்கள், எத்தனை பேர் இருக்கிறார்கள் அவர்களது தொலைபேசி எண் என்ன என்பதைக் கூட அறிந்து கொள்ள முடியாது.
இன்னொரு வகையில் கூறுவதானால் , வாட்ஸ்அப் குரூப் என்பது மின்னஞ்சல் சேவையிலுள்ள CC – கார்பன் நகல் (Carbon Copy) போன்றும் . ப்ரோட்காஸ்ட் பட்டியல்கள் மின்னஞ்சல் சேவையிலுள்ள BCC (பிளைண்ட் கார்பன் நகல்) (Blind Carbon Copy) போன்றும் செயற்படுகின்றன.
இரண்டுக்குமிடையில் மேலும் சில சாதக பாதகங்களைப் பார்ப்போமானால் வாட்ஸ்ஸப் குரூப்பில் நீங்கள் அனுப்பும் செய்திகளை உடனடியாக மீளப்பெறும் வசதியுள்ளது. அதாவது நீங்கள் அனுப்பிய செய்தியை உடனடியாக உங்கள் தொலைபெசியிலிருந்து அல்லது நண்பரின் தொலைபேசியிலிருந்தும் கூட நீக்கலாம். ஆனால் ப்ரோட்காஸ்ட் பட்டியலில் அட்மின் (admin) அதாவது நீங்கள் அனுப்பும் செய்திகளை நீக்க முடியாது.
ஒரு வாட்ஸ்ஸப் குரூப்பில் அதிக பட்சமாக 256 பேரை மட்டுமே இணைக்க முடியும் என்ற எல்லை உண்டு. ஆனால் ப்ரோட்காஸ்ட் பட்டியலில் எத்தனை பேரையும் இணைத்துக் கொள்ள முடியும். எல்லை எதுவும் இல்லை
மேலும் ப்ரோட்காஸ்ட் பட்டியலில் ஒருவரை இணைக்க வேண்டுமானால் உங்கள் தொலைபேசி எண் நண்பரது தொலைபேசி தொடர்பாடல் பட்டியலில் (contact list) சேமிக்கப்படிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் உங்கள் செய்தி பெறுநரைப் போய்ச் சேராது.
வாட்ஸ்ஸப் ப்ரோட்காஸ்ட் பட்டியலை க்ரூப் போன்றே யாரும் இலகுவாக உருவாக்க முடியும். உருவாக்கும் பட்டியலிற்குப் பெயரையும் வழங்க முடியும். ஆனால் அதன் அடையாளப் படத்தை (Profile picture) மாற்ற அனுமதிக்காது. எல்லோருக்கும் அந்த லவுட்ஸ்பீக்கர் ஐக்கானே (loudspeaker – ஒலிப்பெருக்கி)அடையாளப் படமாக அமையும்.
இவற்றையெல்லாம் நோக்கும் போது வாட்ஸ்ஸப் ப்ரோட்காஸ்ட் என்பது அவசியமில்லாத ஓர் அம்சமென நீங்கள் நினைக்கலாம்.அவ்வாறு நினைத்தால் தவறு. வாட்ஸ்ஸப் ப்ரோட்காஸ்ட் என்பது வணிக நோக்கிலேயே (business purpose) பயன் படுத்தப்படுகிறது. அதாவது தமது வாடிக்கையாளர்களை (customers / clients) மாத்திரம் கொண்ட ஒரு ப்ரோட்காஸ்ட் பட்டியலை உருவாக்கி அவர்களிடயே இரகசியமாக ஒருவருக்கொருவர் அறிந்து கொள்ள முடியாதவாறு தகவல்களைப் பரிமாறுவதற்கு மிகவும் பயனுள்ள ஒரு வசதியாக வாட்ஸ்ஸப் ப்ரோட்காஸ்ட் கருதப்படுகிறது
Broadcast எனும் ஆங்கில வார்த்தை வானொலியில் ஒலிபரப்புச் செய்வதைக் குறிக்கிறது. வானொலி என்பது ஒரு வழி தொடர்பாடல் ஊடகம். வானொலி மூலம் தகவல்களை நாம் பெற்றுக் கொள்ள முடியும் ஆனல் பதில் சொல்ல முடியாது. அதனாலோ என்னவோ இந்த வாட்ஸ்ஸப் சேவைக்கும் ப்ரோட்கஸ்ட் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இங்கு ஒரு சிறு குழுவினருக்குத் தகவல் சொல்வதால் அதற்குப் பொருத்தமாக லவுட்ஸ்பீக்கர் ஐக்கானும் பயன் படுத்தப்படுகிறது. டவுட்ஸ்பீக்கரும் வானொலி போன்றதுதான்.