What is Virtual Reality பொதுவாக வேர்ச்சுவல் (Virtual) எனும் வார்த்தை கணினித் துறையில் அதிகமதிகம் பயன் படுத்தப்படும் ஒரு வார்த்தை எனலாம். எனினும் அது மிகப் பொருத்தமாகப் பயன் படுத்தப்படுவது “virtual reality” (மெய்நிகர் யதார்த்தம்) எனும் சொற்றொடரிலாகும். virtual எனும் ஆங்கில வார்த்தைக்கு மெய்நிகர் என தமிழ் பதம் பயன்படுத்தப்படுகிறது.
வேர்ச்சுவல் என்பது நிஜத்தில் இல்லாத ஆனால் இருப்பது போன்ற தோற்றத்தைதையோ உணர்வையோ ஏற்படுத்துவதைக் குறிக்கிறது. வேர்ச்சுவல் ரியலிட்டி என்பது கணினி மற்றும் கணினி வலையமைப்புக்களின் துணையோடு உண்மையானது போல் ”உருவாக்கப்பட்ட” உண்மைக்கு நிகரான ஒரு மாயையைத் தோற்றுவிக்கும் கணிணி தொழில் நுட்பத்தைக் குறித்து நிற்கிறது.
இன்னும் எளிமையாக இதை விளக்கினால் ஒரு புகைப்படத்தையோ அல்லது வீடியோவையே நீங்கள் விரும்பும் கோணத்தில் 360 பாகையில் சுழற்றிச் சுழற்றி உங்களால் பார்க்க முடியும். அவ்வாறு பார்க்கும் போது நீங்கள் அவ்விடத்தில் நிஜமாகவே நிற்பது போன்ற உணர்வை இந்த வேர்ச்சுவல் ரியாலிட்டி தொழி நுட்பம் வழங்குகிறது. உதாரணமாக ஒரு வானுயர்ந்த கட்டடத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தயோ அல்லது வீடியோவையோ
வேர்ச்சுவல் ரியலிட்டி தொழில் நுட்பத்தின் உதவியுடன் பார்க்கும் போது நிஜமாகவே அக்கட்டடத்தின் உச்சியில் நிற்பதுபோன்ற ஒரு அச்ச உனர்வை ஏற்படுத்திவிடும். அதாவது இத்தொழில் நுட்பம் மனித மூளையை ஏமாற்றிவிடுவது போன்ற ஒரு செயற்பாட்டை நிகழ்த்திவிடுகிறது. .
மெய்நிகர் உலகில் பிரவேசிக்க விரும்பும் ஒருவர் அதற்கென விசேடமாகத் தயாரிக்கப்பட்ட கண்ணாடியையும் (glasses) ஹெட்போனையும் (headphones) அணிந்து கொள்ள வேண்டும். பின்னர் அவற்றை கணிணியோடு இணைத்து கணினியில் இயக்கப்படும் மெய்நிகர் செயலியின் மூலம் இந்த வேர்ச்சுவல் ரியாலிட்டி அனுபவத்தைப் பெறலாம். இக்கருவிகளும் செயலியும் கணினியுடன் இணைந்து காண்பிக்கும் காட்சிகளும் எழுப்பும் ஓசைகளும் உங்களை மெய்நிகர் உலகில் அமிழ்த்தி விடும். மேலும் ஒரு பயனர் அவரது தலையையோ கைகளையோ அசைக்கும் போது கணினி அதற்கேற்றாற் போல் நிகழ் நேரத்தில் காட்சிகளையும் கோணத்தையும் மாற்றிக் காண்பிக்கிறது. இன்னும் சில மேம்பட்ட வேர்ச்சுவல் தொழில்நுட்பம் மின்னணு உணரியுடன் கூடிய கையுறைகளையும் அணிந்து கொள்ள அனுமதிக்கிறது,. இதன் மூலம் காட்சியில் இருக்கும் பொருட்களையோ நபர்களையோ தொட்டுணரும் அனுபவத்தையும் பெறமுடியும்..
கடந்த தசாபத்தத்தில் இந்த வேர்ச்சுவல் ரியலிட்டி தொழில் நுட்பம் குறிப்பிடத்தக்க அளவு வளர்ந்திருக்கிறது. அடுத்த தசாபத்தத்தில் கணினிகள் முற்று முழுதாக வேர்ச்சுவல் ரியேலிட்டி தொழில் நுட்பம் இணைந்த இயங்கு தளங்களையே கொண்டிருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
வேர்ச்சுவல் ரியலிட்டி தொழில் நுட்பம் இரானுவம் மற்றும் மருத்துவத் துறைகளில் பயன் படுத்தப்படுகிறது. ஆகாய விமானங்கள் செலுத்தும் பயிற்சிகளிலும் வேர்ச்சுவல் ரியாலிட்டி தொழில் நுட்பம் பயன் படுத்தப்படுகிறது. இதனால் ஒரு விமானி நிஜமாகவே ஒரு விமானத்தைத் செலுத்துவது போன்ற உணர்வைப் பெற முடிவதுடன் நிஜமான பயிற்சியின் போது விமானங்கள் விபத்துக்குள்ளாவதையும் தவிர்க்க முடிகிறது.
தற்போது வேர்ச்சுவல் ரியலிட்டி தொழில் நுட்பம் கணினி விளையாட்டுக்களிலும் பொழுது போக்கு சாதனங்களிலும் பரவலாகப் பயன் படுத்தப்படுகிறது. ஏன்..? இப்போது ஸ்மாட் போன் வைத்திருப்பவர்களும் கூட வேர்ச்சுவல் ரியலிட்டி அனுபவத்தைப் பெற்றிட முடியும்.
நீங்கள் ஸ்மாட் போன் கேமராவில் எடுத்த எந்த படத்தையும் வீடியோவையும் வேர்ச்சுவல் ரியாலிட்டி அனுபவத்துடன் பார்க்க முடியும். அதற்கு உங்களிடம் ஒரு ஸ்மாட்போன், மற்றும் ஹெட்செட் இணைந்த வி-ஆர் க்லாஸ் (VR Glasses) எனும் விசேட கண்னாடியும் இருக்க வேண்டும். இந்த வி-ஆர் க்லாஸ் தற்போது இலங்கையில் ரூபா இரண்டாயிரம் முதல் இரண்டு இலட்சம் வரையில் வெவ்வேறு விலைகளில் வெவ்வேறு வசதிகளுடன் கிடைக்கிறது. கூகில் நிறுவனம் கூட அண்மையில் கூகுல் காட்போட் (CardBoard) எனும் பெயரில் இந்த விசேட கண்ணாடியைத் தயாரித்து மலிவு விலையில் விற்பனைக்கு விட்டிருந்தது.. உங்களிடம் இருப்பது எந்த வகை ஸ்மாட் போனாக இருந்தாலும் அதற்குரிய VR செயலியையும் (VR Player App) நிறுவிக் கொள்ள வேண்டும். எல்லா ஸ்மாட் போன்களும் VR palyer ஐ ஆதரிப்பதில்லை என்பதையும் கவனத்திற் கொள்ளுங்கள்.
முதலில் VR செயலியை இயக்கி அதனூடாகப் பார்க்க விரும்பும் வீடியோவையோ படத்தைத்தையோ திறக்கும்போது அந்த வீடியோ கண்ணாடியின் இரண்டு வில்லைகளுக்குமேற்றவாறு இரண்டு பகுதியாக பிளக்கப்படும் பின்னர் ஸ்மாட் போனை வி-ஆர் க்லாஸின் உள்ளே வைத்து மூடி அதனை அணிந்து கொண்டு பார்க்கும் பொது வேர்ச்சுவல் ரியலிட்டி அனுபவத்தைப் பெறலாம்.