கூகில் மொழி மாற்றியைப் பற்றிப் பலரும் அறிந்திருப்பதோடு பயன்படுத்தியும் இருப்பீர்கள். இதன் மூலம் நீங்கள் விரும்பும் எந்த மொழியிலும் இலகுவாக மாற்றம் செய்து கொள்ள முடியும். உலக மொழிகளில் சுமார் 100 மொழிகளை அறிந்து வைத்திருக்கிறது இந்த கூகில் மொழி மாற்றி.
எனினும் இந்த கூகில் மொழி மாற்றி சேவை தரும் வசதியை இது வரை தெரியாத சொற்களுக்கும், சொற் தொடர்களுக்கும் பொருள் தேடவே பயன் படுத்தியிருப்பீர்கள். ஆனால் அவை தவிர இன்னும் சில விசேட பயன் பாடுகள் கூகில் மொழி மாற்றியில் கிடைக்கின்றன. அவற்றை இங்கு பட்டியலிடுகிறேன்.
இணைய பக்கத்தை முழுமையாக வேறொரு மொழிக்கு மாற்றலாம்.
பிற மொழியிலுள்ள ஒரு இணையதளத்தின் தகவல்கள் (அந்த இணையதளம் எந்த மொழியிலுள்ளது என்பதைக் கூட அறிந்திருக்க வேண்டியதில்லை) உங்களுக்குப் புரியாமலிருந்தால் அதனை நீங்கள் அறிந்த மொழிக்கு உடனடியாகவே மாற்றித் தருகிறது கூகில் ட்ரான்ஸ்லேட். இந்த வசதியைப் பெற அந்த இணையதளத்தின் பக்கமொன்றின் முகவரியை கூகில் மொழிமாற்றியில் இடப்புறமுள்ள பெட்டியில் (text box) வழங்கி விட்டு Detect language தெரிவு நிலையில் வலப்புறம் நீங்கள் மாற்றிக் கொள்ள விரும்பும் மொழியையும் தெரிவு செய்து விட்டு Translate பட்டனில் க்ளிக் செய்து விடுங்கள். அடுத்த சில வினாடிகளில் அந்த இணையதளத்தை நீங்கள் விரும்பிய மொழியில் காண்பிக்கும். அந்த இணையதளத்தை தொடர்ச்சியாகப் பார்வையிடும் போது ஏனைய பக்கங்களையும் மொழி மாற்றம் செய்து காண்பிக்கும். ஆனால் அது கூகில் ட்ரான்ஸ்லேட் மொழி மாற்றி விண்டோவினுள் மாத்திரமே காண்பிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஆவணங்களையும் மொழிமாற்றம் செய்யலாம்
எம்.எஸ்.வர்டில் டைப் செய்த ஆவனங்கள் மற்றும் PDF கோப்புகக்கள் போன்றவற்றை விரும்பிய மொழியில் மாற்றித் தருகிறது கூகில் மொழின் மாற்றி. இந்த வசதியைப் பெற கூகில் மொழிமாற்றி பக்கத்தில் இடப்புறமுள்ள பெட்டியியின் (text box) கீழே Translate a document எனும் இணைப்பில் க்ளிக் செய்யுங்கள். அடுத்து தோன்றும் பக்கத்தில் Choose file க்ளிக் செய்து உங்கள் கணினியில் ஏற்கனவே சேமித்து வைத்துள்ள வர்ட் அல்லது PDF கோப்பைத் தெரிவு செய்து அப்லோட் செய்து விடுங்கள். அதோடு ஆவணத்தின் மூல மொழியைத் தெரிவு செய்து விடுங்கள் அல்லது Detect language என்பதைத் தெரிவு செய்யுங்கள். அதன் மூலம் எந்த மொழி ஆவணம் என்பதை கூகில் மொழி மாற்றியே இனம் காணும். அடுத்து எந்த மொழியில் மாற்ற வேண்டும் என்பதையும் தெரிவு செய்து விட்டு Translate பட்டனில் க்ளிக் செய்ய பிரவுஸரின் ஒரு புதிய டேபில் மொழி மாற்றம் செய்து காண்பிக்கும்.
சொற்களஞ்சியத்தை உருவாக்கலாம்
அவ்வப்போது வெவ்வேறு மொழிகளில் நீங்கள் எதிர் கொள்ளும் அறியாத வார்த்தைகள் அனைத்தையும் நினைவில் வைத்திருப்பது கடினம். அதனால் கூகில் மொழிமாற்றியில் சொற்களை மொழி மாற்றம் செய்வதோடு மாற்றம் செய்யப்படும் சொற்களை சேமித்துக் கொள்ளும் வசதியையும் வழங்குகிறது கூகில். இவ்வாறு சேமித்துக் கொள்ள கூகில் மொழி மாற்றி பக்கத்தின் வலப்புறம் உள்ள பெட்டியின் கீழுள்ள நட்சத்திர ஐக்கனில் அவ்வப்போது க்ளிக் செய்து விட்டாலே போதுமானது. இவ்வாறு சேமிக்கப்படும் சொற்கள் அனைத்தையும் மொழி மாற்றி விண்டோவில் கருமை நிறப் பின்னணியிலான நட்சத்திர ஐக்கனில் க்ளிக் செய்வதன் மூலம். பார்வையிடலாம்.
மொழி அறிவை விருத்தி செய்யலாம்
கூகில் மொழி மாற்றியைப் பயன் படுத்துவதன் மூலம் ஆங்கிலம் போன்ற பிற மொழிகளைக் கற்கவும் அல்லது எமது தாய் மொழியையே இன்னும் விருத்தி செய்து கொள்ளவும் முடிகிறது.
கூகில் மொழிமாற்றியில் ஒரு சொல்லுக்குப் பொருள் தேடும் போது அச்சொல்லின் பொருள் மாத்திரமன்றி அதற்கு ஒத்த சொற்கள், சொல்லின் வகை, அச்சொல் எவ்வாறு பயன் படுத்தப்படுகிறது அதற்குரிய உதாரணம் எனப் பல விடயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. மொத்தத்தில் ஒரு பன்மொழி அகராதியைப் போல் செயற்டுகிறது கூகில் மொழி மாற்றி.