
ஒரு வர்ட் பைலை அல்லது ஒரு படத்தை இணையத்தினூடு அனுப்ப வேண்டிய தேவை ஏற்படும் போது அதனை மின்னஞ்சல் இணைப்பாக அனுப்பி விடலாம் என்பது நீங்கள் அறிந்ததே. அதி வேக இணைய இணைப்பு பயன் பாட்டில் உள்ள இக்காலத்தில் பைல் ஒன்றை அனுப்ப பெற உதவும் இம்முறையானது ஒரு சாதாரண கணினிப் பயனரைப் பொருத்த மட்டில் போதுமானதே.
மாறாக பைல் அளவு அதிகமாகும்போது அல்லது அதிக எண்ணிக்கையிலான பைல்களை அனுப்பும்போது மின்னஞ்லில் அனுப்புவது சிறந்த தெரிவாக அமைய மாட்டாது. ஏனெனில் மின்னஞ்சல் சேவை தரும் நிறுவனங்கள் ஒரு மின்னஞ்சல் இணைப்பாக அனுப்பக் கூடிய பைலின் அளவில் ஒரு எல்லையை நிர்னயித்துள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் எமக்கு உதவுகிறது FTP.

பொதுவாக FTP யானது இணைய தள வடிவமைப்பாளர்களால் அதிகம் பயன் படுத்தப்படுகிறது. இணைய தளங்களை அவை சேமிக்கபடும் சேர்வர் கணினிகளுக்கு அல்லது ஹோஸ்ட் (host) கணினிகளுக்கு அப்லோட் (upload) செய்வதற்காக அவர்களால் இது பயன்படுத்தப்படுகிறது. அத்தோடு அனேகமான இணைய தள சேர்வர்கள் FTP மூலம் மாத்திரமே இணைய தளங்களை அப்லோட் செய்வதற்கு அனுமதிக்கிறது.
ஒரு FTP சேர்வரை இரண்டு முறைகளில் அணுகலாம். முதல் வழி முறையில் உங்களுக்கு வழங்கப்படும் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் கொண்டு உங்கள் அடையாளத்தை உறுதி செய்து கொண்டு ஒரு FTP சேர்வரை அணுகுவதாகும். இரண்டாவது வழிமுறையாக பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் விவரங்கள் ஏதும் இன்றி ஒரு எப்டிபீ சேர்வரை அணுகுவதாகும். இவ்வாறான FTP சேர்வரை (Anonymous FTP) பெயரில்லா எப்டிபீ எனப்படும் இந்த எனோனிமஸ் எப்டிபியை விரும்பிய எவரும் அடைய முடியும்.
ஒரு எப்டிபி சேர்வரை அணுகுவதற்கு இணைய தளங்களைப் பார்வையிட உதவும் இணைய உலாவி அல்லது அதற்கென விசேடமாக உருவாக்கப்பட்ட மென்பொருள் கருவி பயன்படுத்தப்படும். . இவ்வாறான மென்பொருள் கருவிகளை (FTP Client) எப்டிபி க்ளையண்ட் எனப்படும். பிரவுஸரை விட FTP க்ளையன்ட் பயன் படுத்துவதே சிறந்த வழிமுறையாகும். FileZilla. Cute FTP, Smart FTP என ஏராளமான FTP க்ளையண்டுகள் பாவனையிலுள்ளன. இவை அனைத்தும் வேறு பட்ட இடை முகப்புகளைக் கொண்டிருப்பினும் ஒரு கணினியிலிருந்து மற்றுமொரு கணினிக்கு பைல்களைப் பரிமாறும் செயற்பாட்டையே மேற்கொள்கின்றன.
இணைய உலாவி மூலம் FTP சேர்வரை அணுகும்போது முகவரிப் பட்டையில் ftp:// என்பது சேர்த்துக் கொள்ளப்படும். உதாரணமாக, ftp://ftp.schoolnet.lk/ என வழங்கினால் அந்த FTP சேர்வரை அடையாளமில்லாத முறையில் (anonymous) அணுகும். எனினும் அந்த FTP சேர்வர் பயனர் பெயர் மற்றும் கடவு சொல் வினவுமாயின் ftp://username:[email protected] எனும் ஒழுங்கில் வழங்க வேண்டும். எனினும் இவ்வாறு வழங்கும் போது கடவு சொல் பிரவுஸரினால் கணினியில் சேமிக்கப்படும் அத்னால் பாஸ்வர்டை வழங்காது பயனர் பெயரை மட்டும் பின்வருமாறு வழங்கலாம். ftp://[email protected] இவ்வாறு வழங்கும் போது பாஸ்வர்டை பிரவுஸர் பின்னர் வினவும். எனினும் ப்ரவுஸரில் பாஸ்வர்ட் தங்காது. .
வெப் பிரவுஸர் அல்லது எப்டிபீ க்ளையண்ட் பயன் படுத்தி எப்டிபி சேர்வர் ஒன்றை அணுகும்போது சேர்வரிலுள்ள பைல் போல்டர்களை பட்டியலிடக் காணலாம். அதிலிருந்து உங்களுக்குத் தேவையான பைல்களை Drag & drop முறையில் உங்கள் கணினிக்கு டவுன்லோட் செய்யவோ அல்லது உங்கள் கணினியிலிருந்து சேர்வருக்கு அப்லோட் செய்யவோ முடியும்.
-அனூப்-